Pages

Posted on: Thursday, December 17, 2009

திருக்கல்யாணம்..!




திருக்கல்யாணம்..!




ஆலயங்களில்
திருக்கல்யாணம்
வருட, வருடம்
தவறாமல் நடக்கிறது...

தவறாமல்,
தாமாகவோ ...
கட்டாயத்தாலோ ...
எல்லா
முதிர் கன்னிகளும்
கலந்து கொள்கின்றனர் ...
தனக்கும் திருமணம்
நடக்க வேண்டும் என்று..!

ஆனால்,
யாரும் நினைவு கூறுவதில்லை ...
தான் கும்பிடும்
கடவுளுக்கு
திருமண சடங்கை
உருவாக்கியவன் ,
வரதட்சணை முறையை
மட்டும் அங்கு
புகுத்தாதலால் தான் ....

திருக்கல்யாணம்
வருட, வருடம்
தவறாமல் நடக்கிறது...!

Posted on: Wednesday, December 16, 2009

மூன்றாவது செவி ...!  



மூன்றாவது செவி ...!



படுக்கையில் கூட 
இரண்டாவது மனைவியாய்
அருகாமை,
தவிர்க்க முடியவில்லை...!

எப்பொழுதும் உடனிருந்து 
கட்டளையிடும் 
எஜமானனாய் ...!

குனிந்து பெருக்கும்
எதிர் வீட்டு பெண்ணின் 
கலைந்த ஆடைகளுக்கு 
இடையே,
தவிர்க்க, தவிர்க்க 
அனிச்சையாய் போகும் 
கண்களைப்போல்...
இடைஞ்சலாய் உணர்ந்தாலும் 
தவிர்க்க முடியவில்லை...!

சண்டை போடாத 
மனைவியை அடைந்தவன் போல்,
 வாழ்க்கை   சுவராஸ்யம்
இழந்து போகிறது...!

சினுங்கா அலைபேசி 
காதலி இல்லாமல் 
கடற்கரை மணலில் 
தனிமையில் காத்திருத்தல் போல்...!  

Posted on: Tuesday, December 15, 2009

நடந்து போன பாதையில்....!






நடந்து போன பாதையில்....!




ஒன்பது கிரகங்கள்,
சில கட்டங்கள்,
சிலரது பிழைப்புகள்..!

மனித கழிவை 
மனிதனே அள்ள
மாந்தர்களின் அரசியல் ...!

காவித்துணிகள்
அதில் சில
காக்கி உடைகள் ...
காக்கி உடைகள் 
அதில் சில 
கையேந்தி பிச்சைக்காரர்கள் ...!

சரிநிகர் உயிர்கள் 
பாலினத்தால்      
பலகீனப்படுத்தப்பட்டு
தன் உரிமைக்காக
33 சதவீதமாவது தா ..
என கெஞ்ச வைக்கும்
முட சமூகம்...!

சமூக விலங்குகள் 
நடந்து போன 
பாதையெங்கும் 
முகங்கள் சிதறிகிடக்கிறது ...
அத்தனையும் போலியாய் ....!

உண்மை முகம் தேடி 
தோற்று 
என் அறையுள் நுழைந்தேன் ...
அங்கே சில முகங்கள் 
சூடி எறியப்பட்டு ...! 

Posted on: Tuesday, November 10, 2009

பிளாஸ்டிக் உயிர்கள்...!






பிளாஸ்டிக் உயிர்கள்...!





பிளாஸ்டிக் பூக்கள்
என்று தெரியாமல்
கண்ணாடி கதவுகளுக்குப்பின்
காதலுடன் கலர் கலராய்
பட்டாம்பூச்சிகள்…...

மகரந்த சேர்க்கை
செயற்கையாய் போனதால்
தானும்
பிளாஸ்டிக் பட்டாம்பூச்சியாய்
மாறவேண்டிய கட்டாயத்தில்
பட்டாம்பூச்சிகள்...

அறையெங்கும்
பிணங்கள் ...
அத்தனையும் உயிரோடு...!

குளிர்சாதன அறையுள்
அழகாய் பிளாஸ்டிக் மலர்கள்
அதன்மேல்
பிளாஸ்டிக் பட்டாம்பூச்சிகள்
அழகாய் சொருகப்பட்டு ...!

பஞ்சு நாற்காலியில்
அமர்ந்து மனித இயந்திரம்
இரசித்துக்கொண்டிருந்தது ...

தனக்கு தரப்பட்ட
இரண்டு நிமிட
இடைவேளையுள் ....!

Posted on: Wednesday, October 21, 2009

நானும், கலைமகள் மாத இதழும் - கல்லுக்குள் ஈரம் தேடும் நெஞ்சங்கள் ....

கலைமகள் - செப்டம்பர் ,1993 இதழில் வெளியான எனது கதை




Posted on: Thursday, October 15, 2009

கந்தக தீபாவளி ...!





கந்தக தீபாவளி ...!



பட்டாசு வெடித்து
தீபாவளி கொண்டாடுங்கள்...!

பட்டாசு சத்தம்
கந்தக பிஞ்சுக்களின்
கால் வயிற்று கஞ்சி...!

கந்தக கிடங்கில்
கருகிய மொட்டுக்களின்
பச்சை இரத்த வாசம்...

மகரந்த கனவுடன்
மொட்டோடு கருகிய
எதிர்கால....
மருத்துவர்...!
பொறியாளர்...!
விஞ்ஞானி ....!

கந்தக குளத்தில்
தன் சந்ததியாவது
மலரும் என்ற நம்பிக்கையில்,
பல செடிகள்
தலைமுறை,
தலைமுறையாய்.....
மலடாய்...!

விடிந்தால்
தீபாவளி....
எங்களுக்கும் தான்....!

கந்தகம் வெடித்து
சிதறும் சத்தத்தில்
எங்கள்
வயிறு சிரிக்கும்...!

கங்கா ஸ்நானம்
செய்யாவிட்டாலும்
கங்கைக்கு ஒன்றும்
பாதகமில்லை....

பட்டாசு சத்தம்
உங்களுக்கு வேடிக்கை...!
எங்களுக்கு
கால் வயிற்று கஞ்சி...!

Posted on: Thursday, October 8, 2009

வாலிபத்தின் தாய்மடி …!



வாலிபத்தின் தாய்மடி …!



தனிமை இனிக்கும் ...!
உனக்கே நீ பரிச்சயமாவாய்...!

சீரும் நாகத்தை கூட
அழகாய் இருக்கிறது
என்று இரசிக்க தோன்றும்...

இரவெல்லாம் கவி எழுத
முயன்று இறுதியில்
அவள் உருவம் வரைந்து
தலைப்பாய்
அவள் பெயர் எழுதி
பெரும் கவியாகிவிட்டதாய்
காலரை தூக்கிவிட்டுக்கொள்ளும் ....

மழலைக்கு தாய் ...!
இளைஞனுக்கு காதலி ..!
முழுமைக்கும் மனைவி ...!
காதலின் பரிணாமங்கள்..!

காதல் வாழ்க்கையின் மொழி ..!
கவிதை காதலின் வித்து ..!

குழந்தையாய் பிரசவிப்பவள் தாய் ...!
கவிஞனாய் மறு பிரசவிப்பவள் காதலி...!!

அதனால்,
காதலியுங்கள் ….

உனக்கே நீ
பரிச்சயமாக...
உன்னையே நீ
அறிந்துக்கொள்ள ....

காதல் வயப்படல் ஒன்றும்
பாவமில்லை ....
காமமில்லா காதலை
தாய்ப்பாசத்துடன் நீ
அணுகுவதாயின் ....!

Posted on: Thursday, September 10, 2009

தன்மானம் தவிர்....!


தன்மானம் தவிர்....!





முதல் தேதிக்கு
முன்புவரும் ஞாயிறு....

நாயர் கடையில்,
கருவேப்பிலையோடு,
பச்சை மிளகாய்
மசால்வடை வாசனை
கேலி செய்கிறது ....

டீ -
"மூன்று ரூபாய் ஐம்பது பைசாக்கள்"
-பல் இளித்து
நக்கலடிக்கும் ஸ்லேட்டு வாசகம்..!

நண்பர்களைப்போல்,
உயிரில்லா
ஏ.டி.எம் இயந்திரமும்
மதித்து பத்து ரூபாய்
ஓ.டி தர மறுக்கிறது...

"நாயர், பழைய பாக்கியை
கேட்பாரோ?"
பயம் பத்தடிக்கு முன்பே
தடைபோட்டு நிறுத்திவைத்திருக்கிறது ...

அறிமுகமான யாராவது
டீ குடிக்க வரமாட்டார்களா ...?
காத்திருந்தேன் ...!

ஒரு ஜான் வயிற்றின்முன்
எண் ஜானும்
தோற்றுபோயின....!

முதல் தேதி வராமலா
போய்விடும்...?
முதல் தேதிக்கு
முன்பு வரும்
ஞாயிறை சபித்தபடியே ...

"நாயர்..!
நம்ப கணக்கு எவ்வளவு
ஆச்சு பாரு .. ."
சவடால் குரல் கொடுத்தபடியே
ஒரு மசால்வடையை எடுத்து
முனை கடித்தேன்...

தன்மானம்
முதல் தேதிவரை
தள்ளியே
நிற்கிறேன் என்றது ...!

Posted on: Thursday, September 3, 2009

துணைக்கு உன் நினைவுகள் ...




ஏக்கம்...!







நீ நின்றயிடம்....
நீ ஐஸ்கிரீம் சாப்பிட்ட பார்லர்...
நீ சாப்பிட்டபின் இதழொத்தி
எறிந்த காகிதம் விழுந்த குப்பைத்தொட்டி ...
ஒவ்வொரு இடத்தையும்
மனதால் மணந்து,
பார்வையால் வருடி...
அந்த சுகத்தில்
வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்....!

நீ உன் புதுக்கணவனிடம்
சுட்டிக்காட்டினாய் ,
"அந்த இடத்தில்லிருந்து தான்
ஒரு பைத்தியக்காரன் தினம்
என்னை பார்த்து
சிரித்தான்" என்று ....

தவறு ஒன்றும்
இல்லை, சகியே...!
நான் அங்கு
இருக்கிறேனா என்று
"ஒரு கணம்
"
பார்த்துவிட்டு
பேசியிருக்கலாம்.....!


இருட்டு ...!


வெறுமையான இரவுகள்....
துணைக்கு உன் நினைவுகள் ...
அழகாய் தெரிந்தாள் ....
இருட்டு!

Posted on: Tuesday, September 1, 2009

உன்னை நேசிக்க வைத்து ...!





காதலோடு...!






புதுகவிதையாய் நீ ...
மரபு கவிதையாய் நான்...
நமக்குள் தொடர்ந்து
கொண்டுத்தான்
இருக்கிறது...
முடிவுறா
விமர்சனங்கள்
காதலோடு...!




உன்னை நேசிக்க வைத்து ...!



உன் பார்வை
என்னை
தீண்டும்போதெல்லாம்
அகலிகையாய்
ஆகிடும் நான் ...

என்னை நீ
தவிர்த்திட முயலும்
கணங்களில்
முருங்கையாய்
முறிக்கப்படுகிறேன் ...

மறுபடியும்,
மறுபடியும்
துளிர்த்தெழுந்து
உன்னை நேசிக்க...!





மனசு ..!






உன் இரட்டை
ஜடையில்
ஒற்றை ரோஜா...
ஆடுகிறது மனசு..!

அறியாமை ...!





அறியாமை ...!



புத்தகத்திற்குள்
மயிலிறகை
வைத்துக்கொண்டு
குட்டி போடும்
என காத்துகிடந்த
அறியாமை
இன்றும்
தொடர்ந்துக்கொண்டுத்தான்
இருக்கிறது ...
கோப்புகளுக்குள்
பட்டங்களை
வைத்துக்கொண்டு ...!




உழைப்(பு) பூ



அழகு
உருவத்திலில்லை
பார்வையில்...!

சுவை
உணவிலில்லை
பசியில்...!

துன்பம்
மனதிலில்லை
பார்வையில்..!

வெற்றி
அதிருஷ்டத்திலில்லை
உழைப்பில் ..!

Posted on: Thursday, July 23, 2009

நாலு விராட்டியும், ஒரு தீ பெட்டியும்........!






நாலு விராட்டியும், ஒரு தீ பெட்டியும்........!


இரண்டாவது
தாலியாய்
நிறுவன அடையாள அட்டை....!

தவணை முறை
வசதிகளை உதறிவிடவும்
மனமில்லை ...!


வாழ்க்கை
எப்பொழுதும்
முன் பதிவுசெய்த
இருக்கையாய்
அமைந்துவிடுவதில்லை ....

சில சமயம்
காத்திருப்போர் பட்டியலில் ....!

பல சமயம்
முன் பதிவில்லாத இருக்கையில்...

அடுத்த நிறுத்தத்தில்
அமர்ந்திருப்பவர் எழுந்ததும்
அந்த இருக்கை நமக்குத்தான்
என்ற நம்பிக்கையில் ...!

பயண முடிவில்
இருக்கை
வேறு ஒருவருக்கு... !

முதல் வகுப்பில்
பயணித்தாலும்...
முன் பதிவில்லா இருக்கையில்
பயணித்தாலும்...

தேவைப்படுவது
நாலு விராட்டியும்,
ஒரு தீ பெட்டியும் தான்....!

அதுகூட
இன்று சுருங்கி
ஒரு பொத்தானாய் போனது ...!

அடுத்த நொடி
நிச்சயமில்லாதபோது
இந்த நொடியில்
வாழத்தெரியாமல்
அடுத்தவருடன் தன் வாழ்வை
ஒப்புமை படுத்தி
சுயம் தொலைத்து
வேஷம் கட்டவே காலம்
போதவில்லை .... !

நன்றி தினகதிர் வாரகதிர் - செப்டம்பர்,13,2009

Posted on: Friday, July 3, 2009

தொலைந்து போனவன் ...!












ஏக்கம்...!


பின்புற தோட்டத்து
மாமர ஒற்றை கிளையில்
குயில் கச்சேரி.....
தத்தி, தாவி
நடனமிடும் அணில்,
இரசித்திட ஆசை...
ஞாயிறு வருமென
சமாதனம் சொன்னது
இயந்திர வாழ்க்கை....!

*************************
தொலைந்து போனவன் ...!


பரணில்
பள்ளி பருவத்தில்
வாங்கிய கோப்பைகளுக்கு
மத்தியில்,
கோப்பைகளாய்
தூசி படிந்து கிடக்கிறது ....
வாழ்க்கை பயணத்தில்
தொலைத்திட்ட இலட்சியங்கள் ....!

*********************

முரண்....!


மோட்டு கூரை
பிய்ந்து வீட்டிற்குள்
பட்டு தெறிக்கும்
மழைத் தூளி கண்டு
துள்ளி குதித்து
குதுகளித்தது
மழலை மனம்....!
வறுமை என
பிதற்றிக்கிடந்தது ....
இயந்திர வாழ்வில்
சுயம் தொலைத்த மனம்...!

Posted on: Thursday, July 2, 2009

விண்ணப்பம் ...! (காதலிக்காத பெண்களுக்கு மட்டும்..)






விண்ணப்பம் ...!





என் அறையெங்கும்
பொக்கிசமாய் உன் தடயங்கள் ...

உன் தாவணி
கிழித்த வேலிகாத்தான்
முள் முதல்,
உன் பாதம் வருடிய
கருங்கல் வரை ....

என்னை உன்
பொக்கிசமாய்
பரணிலாவது
தூக்கிபோடேன் .....

********************

ஜோடி பொருத்தம் ...!


கோவில் வாசலில்
உன் காலணி அருகே
என் காலணியை
கழற்றிவிட்டு,
பிரிய மனமின்றி
நின்று இரசிக்கிறேன் .....
ஜோடி பொருத்தத்தை ...!
**********************

உன் வாசம்...!


என் சட்டை பைக்குள்
உன் வாசம் ...!
நேற்று நீ
சூடி வீசி எறிந்த
ரோஜாவுடன் உன்
தலை முடிகள்...!

*************************

காதல் ....!


விழி மீன்
தூண்டியலிட
இதய புழு
வழியப்போய்
சிக்கிக் கொள்கிறது ...!

அறிவிப்பு....! (பெட்ரோல் விலை உயர்வு ஏழைகளை பாதிக்காது..! ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் ....)









அறிவிப்பு....!


பெட்ரோல் விலை உயர்வு
அறிவித்தார் அமைச்சர்.....
இது ஏழைகளின் பட்ஜெட்
ஏனென்றால்,
ஏழைகள்
நடந்தல்லவா செல்கின்றனர் ....!

********************************************************

அறிவிப்பு....!


குடிசைகள்
இல்லா
பாரதத்தை உருவாக்குவோம்
அறிவித்தார் அமைச்சர்.....
அவர் கண்பட்ட
குடிசைகள்
பங்களாக்களாக மாறின ...
மக்கள் மட்டும்
நடை பாதையில் .....

-----

Posted on: Friday, June 26, 2009

பணம் என்பது......!











பணம் என்பது......!








வயிறு ஓலமிட
உணவு படைத்தல்
பணத்தால் அளவிடப்பட்ட போது,
பணம் உணவானது ....!

நோய் வாய்ப்பட்டபோது
மருத்துவ வசதி
பணத்தால் அளவிடப்பட்ட போது
பணம் மருத்துவனானது...!

உறவுகள் இணைந்திருக்க
பணம் பிரதானமான போது
பணம் உறவுகளை இணைக்கும்
கயிறானது ...!

ஆனால்,
மனித வாழ்க்கைக்கு
என்றுமே
பணம், பணமாக
தேவைப்படவில்லை
என்பது .....

மதிப்பிட முடிகின்ற
காகிதங்களை மீறி
மதிப்பிட முடியாத
மனிதநேயத்தை உணர்ந்தபோது ....

பணம் வெறும்
பண்டமாற்று தான் ...!

Posted on: Tuesday, June 23, 2009

முகம் தொலைத்த உடல்கள்....!




முகம் தொலைத்த உடல்கள் .....



எப்பொழுதாவது வந்து போகும் டவுன் பஸ் கண்ணுக்கு எட்டிய தூரம் மறையும் வரை பார்த்துக்கொண்டே நின்றேன்!

இருபது வருஷம். நேற்று போன மாதிரி இருக்கு. ஆனா, இந்த கிராமம் மட்டும் அதே பதினாறு வயசு குமரி....அன்னைக்கு பார்த்த மாதிரியே ...வயுத்து பாட்டுக்கு நகரத்துல நரகமா தெரியுற வாழ்கை இங்கே, சொர்க்கமா தெரியுது…!

பழைய சம்பவங்களை அசைபோட்ட படியே, வரப்பில் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். இருபது வருசத்துக்கு அப்புறம் இப்பத்தான் .... திருமணம் கூட சென்னையிலயே நடந்ததால வர வாய்ப்பு இல்லாம போனது.
இப்படியே இன்னும் ரெண்டு பர்லாங் போவணும் ... மாட்டு வண்டி ஏதும் தென்பட்டா நல்லாயுருக்கும் ...போற வழில வாய்க்கால் ஒண்ணு …ஒயிலா பருவ பெண் இடுப்ப ஆட்டி,ஆட்டி நடக்குற மாதிரி வளைஞ்சி, வளைஞ்சி ஓடும்... !
அந்த கரைல ஏதாவது மரத்துக்கு பின்னாடி மறைவா திருட்டு தம் அடிக்கிற சுகம், பைவ்ஸ்டார் ஹோட்டல்ல பாரின் சிகரட் அடிச்சாலும் கிடைக்காது....!
வரப்போரம் என் பால்யகால நண்பன் முனியன் கோவணத்தை பாய்த்துக்கொண்டு, வரப்பை வெட்டி தண்ணீரை அடுத்த பார்த்திக்கு திருப்பிக் கொண்டிருந்தான். ஒட்டிய வயிற்றுடன், தலை முக்கால் வாசி நரைத்து, காலம் அவன் மீது ஆதிக்கம் செய்ய தொடக்கி இருந்தது!

என் தலையை தடவிக்கொண்டேன்! 'டை' கைகர்யத்தில் இன்னும் இளமையாக தான் தெரியுற...!

நான், முனியன், ஐயர் பையன் சங்கரன் இன்னும் ஒரு நாளு, ஐந்து பேர் ஒரு குருப்பாத்தான் அலைவோம். பண்ணாத சேட்டை இல்லை...

முனியான பார்த்த மாத்திரத்தில், அந்த கால நினைவுகள், இளமையை என்னுள் ரீ-சார்ஜ் செய்ய... கையில் இருந்த லக்கேஜை அப்படியே வரப்பில் போட்டு விட்டு, என்னை அறியாமலே, அனிச்சையாய், "டேய்....முனியா ....!" என்றபடியே வயலில் இறங்கினேன்.

சேறு நிறைந்த வயலில் இறங்கும் போது பேண்டை மடித்து விட்டுக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு கூட இல்லாமல், அப்படியே மண் வெட்டியுடன் சேர்த்து அவனை அலக்காக தூக்கி சுற்றினேன்.

"ஐய்....யா .யா ..." துள்ளிகுதித்து எதோ அவன் தவறு செய்து விட்ட மாதிரி குறுகி நின்றான்!

"டேய்...நான் சரவணன்டா .. ஊ நண்பன் ...ஊ கூட ஒண்ணா ஊரு சுத்தின அதே ... நீ, நான் சங்கரன்லா ஒண்ணா சேர்ந்து சாமியார் தோப்புல மாங்காய் திருடி மட்டிகிட்டோமே ...."

முனியன் மறந்து இருப்பான் என்ற நெனைப்பில் பழையதை நினைவுபடுத்தும் முயற்ச்சியில் இறங்கினேன்!

"இருக்கலாங்கய்யா ...அதுலா, சின்னதுல செஞ்சது ...புத்தியில்லாத வயசு ... தராதரம் தெரியாதது ....அதுக்குன்னு பட்டணத்துல படிச்ச, காரை வீட்டு புள்ள நீங்க எங்க? ..நான் எங்க? ...நமக்கு நம்ம பவுசு தெரியவேணாமாய்யா ...? "

சுதாகரித்துக்கொள்ளும் முன், எங்கோ மறைந்துவிட்டிருந்தான்.

ஒன்றும் புரியாமல் கொஞ்ச நேரம் அப்படியே நின்றுகொண்டிருந்தேன்... நாம் ஏதோனும் தவறு செய்துவிட்டோமோ ...?

யோசனையுடன் நடையை தொடரும் பொது தான் சங்கரன் நினைவு வந்தது.

சங்கரன் சிவன் கோவிலில் பூசாரியாய் இருப்பதாய் அம்மா கடிதம் போடும் போது ஒரு கடிதத்தில் சொல்லியிருந்தாள். சிவன் கோவிலை தாண்டும் போது நினைவுக்கு வர, அவனை பார்த்துவிட்டு போகும் ஆவலில் உள்ளே நுழைந்தேன்.

சங்கரன் பஞ்ச கச்சம் கட்டி, நெற்றி முழுக்க திருநீர் பூசி அமர்க்களமாய் இருந்தான். பல சுற்றுக்கள் பெருத்தும் இருந்தான். குடுமி முன்பைவிட பெரிதாய் இருந்தது.

எத்தனைவாட்டி இவன் குடுமியை அவிழ்த்துவிட்டு கலாச்சியிருக்கோம்.... அவன் குடுமி மேல எனக்கு அப்படி ஒரு ஈர்ப்பு!

அதே மாதிரி அவன் கொண்டுவர்ர புளியோதரை ....சும்மா வாசனையே ஆளை தூக்கும் ... அதுல கிடக்குற வேர்கடலையை பொருக்கி சாப்பிடறதே தனி சுவை!

சங்கரன் ஆரத்தி தட்டுடன் கருவறையை விட்டு வெளிவந்தவன் எல்லோர் முன்பும் நீட்டுவது போலவே என் முன்பும் தட்டை நீட்டினான்.

"சங்கரா .."

"வாங்கோ ..சென்னைல இருந்து எப்போ வந்தேள்? ஆத்துல ....."

பார்மாலிட்டி கேள்விகளை அடுக்கியவன், கூட்டம் சேர அடுத்த ஆரத்திக்கு தயாரானான்.

அவன் முகத்தில் பால்யசிநேகிதனை பார்த்த மகிழ்ச்சியை காணவில்லை....இரண்டு வார்த்தையில் உன்னை எனக்கு தெரியும் என்பதாய் காட்டிவிட்டு, புரியாத மொழியில் கடவுளிடம் பேச போனவனை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கருவறைக்குள் ஓடிபோய் குடுமியை அவிழ்த்துவிட்டு சேட்டை செய்ய பழைய நினைவு துரத்தினாலும், ஒரு வேளை இவர்கள் அவர்களாய் இல்லாமல் இருப்பார்களோ...? மெல்ல வெளியேறினேன்...!

சல சல வென ஓடிவரும் வாய்க்கால் கரையில் அமர்ந்தேன்.

இதே வாய்க்கால்ல என் சட்டைய சங்கரன், அனிபா, முனியன்னு எல்லோரும் ஆளுக்கு ஒரு மூலையா புடிச்சி ... அப்படியே அள்ளுனா...எங்க இருக்குற மீனும் நம்ம சட்டைக்கு ஓடிவந்துடும் ....
அதோ அந்த பாறைக்கு மறைவா சுட்டு சாப்பிட்டோமே ..... கட்டடிச்சிட்டு, ஒண்ணா மலையாள படம் பார்த்தது .....எல்லாத்தையும் இவங்களால மட்டும் எப்படி?...எங்கே தொலைந்து போனார்கள் .....?
ஊளை மூக்கை உறிஞ்சிக்கிட்டு சுத்தும் போது குருக்கள் மகனும் தெரியல ... வெட்டியான் மகனும் தெரியல ....வளர்ந்துட்டா மட்டும் எப்படி...? நம்மலோடவே சேர்ந்து அதுவும் வளர்ந்துடுதா ...? காலம் அவர்களை தொலைத்து விடுகிறதா....?

வாய்க்காலின் மறு கரையில், "ஆய் ...ஊய் ..." என்று சிரிப்பொலி கேட்க, சிந்தனை கலைந்து தலைநிமிர்ந்து பார்த்தேன்.

அதே போல், நான்கு, ஐந்து நண்பர்கள் கூட்டம். சத்துணவில் கொடுத்த சைசுக்கு ஒத்து வராத அந்த காக்கி டவுசரை ஒரு கையால் பிடித்தபடியே ஒரு அய்யர் பையனின் குடுமியை அவிழ்த்துவிட துரத்திக்கொண்டிருந்தனர்!
ஒருவனின் கையில், சட்டைத் துணியில் சில மீன்கள் துள்ளிக் கொண்டிருந்தது!

இதே மாதிரித்தான்...ரொம்ப நாள் கூட இல்ல ...இருபது வருஷம் தான்... அந்த நாட்கள் இனி தேடினாலும் கிடைக்கவா போகிறது ...? இப்படின்னு தெரிந்திருந்தால், வளராமலாவது இருந்திருக்கலாம் ....!

வளர, வளர ஜாதி, மதம், அந்தஸ்த்துன்னு விதவிதமா உடுப்பை போட்டுக்கிட்டு ...நம்மள தொலைச்சிட்டு ..... உண்மையான மனிதர்கள் நிச்சயமா வளர்ந்துட்டா கிடைக்க மாட்டார்கள்....

அவர்கள் வேறு யாரோ ... இவர்கள் வேறு யாரோ .... இங்கே முண்டங்கள் முகம் தின்று வாழ்கின்றன...!

மனம் நிறைய வேதனையோடு தலை குனிந்து நடந்துக் கொண்டிருந்தேன்...!

(முற்றும்)

Posted on: Monday, June 15, 2009

சமுதாய பிச்சைக்காரர்கள் ...


ஆகஸ்ட் 15 ……?


சுதந்திர தேவிக்கு
62 - வது வயது ...
இந்திய தொழிலாளர் சட்டப்படி
ஓய்வு பெற்று நான்கு வருடங்கள்
ஆகிவிட்டன ...

இன்றும் காத்திருக்கிறாள் ...

உலை வைக்க ரேசன் கடையில்,
நீண்ட வரிசையில் ...

தான் உயிருடன் இருப்பதை
நிருபித்து முதியோர் உதவி தொகை
பெற்றிட அரசு அலுவலக வாசலில் ...
கையில் கடன் வாங்கிய
நூறு ரூபாய் லஞ்ச பணத்துடன் ...



சமுதாய பிச்சைக்காரர்கள் ...


சுருக்கம் விழுந்த வயிற்றுக்காக
கை ஏந்தினான் கோவில்வாசலில்
-பிச்சைக்காரன் ...!

மதுவுக்கும், பிரியாணிக்காகவும்
வாகனங்களை ஓரம் கட்டினான்
போக்குவரத்து கே(கா)வலன் ….

தன் தலைமுறைக்கும்
சொத்து சேர்த்திட
ஓட்டுக்காக கை ஏந்தினான்
-அரசியல்வாதி ...

இங்கே
பிச்சைகள் ஒன்றுத்தான் ...
பெறும் முறைகள் தான்
வேறுபடுகின்றன ...!


ஏக்கம் ...!


அந்த படுபாவி ஆங்கிலயன்
மட்டும் பகலில் சுதந்திரம்
கொடுத்திருந்தால் ...
ஒரு வேளை தூக்கத்தில்
தொலைக்காமல் இருந்திருக்கலாம் ....

இயந்திர வாழ்க்கை ...


தினமோர் மறு
பிரசவம் ...
நெரிசல் பஸ்ஸில் ...!

என்றும் இல்லாமல் ...


அவள் என்னைப்பார்த்து
சிரித்த அன்று
கண்ணாடியில் தெரிந்தேன்
அழகாய் ....!

(நன்றி குமுதம் - 01/07/2009)

என் காதலி ...


அப்படியொன்றும் கவர்ச்சியாய்
இல்லை ...

மார்புகள் வற்றி ...
கண்களை சுற்றி கருவளையங்கள் ...
கன்னங்களில் சுருக்கங்கள் ...
ஆனாலும், பேரழகியாக தெரிகிறாள்....

அவரவர்களுக்கு
அவர்கள் தாய்...!

Posted on: Monday, June 8, 2009

இரண்டாவது சுதந்திரம் .....


இரண்டாவது சுதந்திரம் .....

பசியின் முகவரி
தெரியாமல் என்
புரட்சிக்கவிஞன்
பத்து பதினைந்து தென்னைகளுக்கு
மத்தியில் காதல் கவி புனையவேண்டும் ....

அன்பாய் பிறப்பெடுத்த
என் பொக்கைவாய் அகிம்ஷா
தாத்தா நடுவீட்டில்
சாய்வு நாற்காலியில் அமர்ந்து
அளாவளாவி குதுகளிக்க வேண்டும் ...

என் முதல் குடிமகன்
குண்டு துளைக்கா கூண்டை
உடைத்து,
தைரியமாய் வெளிவந்து
சுதந்திர கொடி ஏற்ற வேண்டும் ....

சிறைச்சாலைகள்
சிறுவர் பூங்காக்களாக
மலர வேண்டும் ...

வல்லரசு இந்தியாவின்
ஓர் குடையின் கீழ் இவ்வுலகம்
வரவேண்டும் ....
அதை ஓர் தமிழன் வழிநடத்த வேண்டும் ....

அங்கே மனிதநேயம்
தாய்ப்பாசத்துடன் மலரும்....!

இன்றைய கனவு
நாளைய வெளிச்சம் ...!

இங்கே,
பாரதிக்கும் ..
சுபாசுக்கும் ...
காந்திக்குமா பஞ்சம் ...?

எழுந்து வாருங்கள்
இரண்டாவது சுதந்திரம்
வெகு தூரமில்லை ....

நன்றி தினகதிர் வாரகதிர் - ஆகஸ்ட், 9, 2009

Posted on: Tuesday, June 2, 2009

தவிர்க்க முடியாத உணர்வுகள் ...


தவிர்க்க முடியாத உணர்வுகள் ...

காலை சுற்றிய பாம்பாய்
கடித்துக் கொண்டுயிருக்கிறது
உன் நினைவுகள் ...

அது ஒரு கனாக்காலம்...
மார்கழிமாத குளிராய்
நீ போட்ட கோலம் ...
அழியாமல் தாண்டிபோகும்
கன நேரம்
உன் நாணம் கண்டு
என் கால்கள் தடுமாறும் ...

இதயத்தின் பரிபாசையை
புரிந்துகொண்ட நாம்,
பொருளாதார உறவுகளை
புரிந்துக்கொள்ளாததால் ....
அர்த்த நாரியின் பிள்ளை கனவாய் .....

காலம் ஒரு விளையாட்டுப் பிள்ளை ....

உலகம் உருண்டை ...!

நாம் இருவரும்
மறுபடியும், மறுமுனையில்
சந்தித்து கொண்டோம் ...

நான் முதலாவதாய் மணந்திருந்த
உன் நினைவுகளும் ...
நீ முதலாவதாய் மணந்திருந்த
என் நினைவுகளும் ...
ஊமைகலாய் தாண்டிப்போனார்கள் ....

காலத்தின் ஓட்டங்கள்
உடல்களை பிரித்திருக்கலாம் ...

ஆனால்,
மறக்க முடியாது ...
அந்த முதல் முத்தத்தையும் ...!
முதல் பார்வையையும் ...!!

தவிர்க்க முடியாது ...
நிகழ்கால கணவன் மனைவிக்கு
நடுவே
முன்றாவது ஆளாய் "அது "
படுத்து கிடப்பதையும் ....

நன்றி தினமலர் வாரமலர் - 23/08/2009

ஓர் உணர்வின் உளறல் ....

தாய்மை ...!

அரை நிர்வானமாய் அவள் ....
கையில் பசியோடு குழந்தை ...
சுற்றிலும் கண்கள் ....
- தோற்று போனான் காமன்...!

---------------------------------

மனசு ...

அமைதி தேடி போன இடத்தில்
அமைதி இன்றி தவிக்கிறது மனம்...
கோவில் நடை பதையில்
யாரோ தவறவிட்ட
ஒற்றை ரூபாய் .....!

----------------------------

குற்ற உணர்ச்சி....

பணத்திற்கு ஆசைப்பட்டு
ஆள்காட்டி விரலில்
கரும் புள்ளி வைத்தேன் ....
கறை படிந்து  கிடக்கிறது மனசு ....!
---------------------------------


காதல் ...!

விழிமீன் தூண்டியலிட
இதயப்புழு
வழியப் போய்சிக்கி
கொள்கிறது ...!
-------------------------

விலைமகள் ...!

ஒரு ஜனுக்காக
எண் ஜானும் மரித்து போயி்ன ..!
கழுத்திற்கு கீழே கோடி கண்கள் ...!
கண்களுக்கு கீழே
துளிர்த்திருக்கும்
ஓர் துளியை யார் பார்ப்பார் ....?

Posted on: Monday, June 1, 2009

முப்பத்து மூன்று சதவீதத்திற்கு ....






முப்பத்து மூன்று சதவீதத்திற்கு ....


அன்றே கொடுத்திட்டன்
சிவன்
ஐம்பது சதவிதத்தை பெண்ணுக்கு...!
அரசியல்வாதியே...!
நீ யார் முப்பத்து மூன்று சதவீதத்திற்கு
நந்தியாய் .....
தரகனாய் ......
இடையில்,
விலகி நில் ...
நாளைய உலகம்
பால் வேறுபாடு அற்ற
சரிசமான
எங்கள் உலகம் ... !

வாழ்க்கை

தூண்டியலில் புழு,
கரையில் ........
-பசியோடு மனிதன்.....
நீரில் பசியோடு மீன் ....
- வாழ்க்கை!

Posted on: Wednesday, May 27, 2009

நீ சம்மதித்தால்....


நன்றி தினகதிர் வாரகதிர் - மார்ச் , 1 , 2009

Posted on: Monday, May 25, 2009

நாளைக்கு அஞ்சு வயசில ...


நன்றி பாக்கியா - மே , 24 - 30/1996

காரணம் ....


நன்றி - இதயம் பேசுகிறது - 11-06-2000

Posted on: Thursday, May 21, 2009

உணர்வுகள் ...


நன்றி புரட்சி வேந்தன்

வேண்டாம் போலி வாழ்க்கை ....


நன்றி தினமலர் வாரமலர் - ஜனவரி , 19, 1992

வேடிக்கை மனிதர்கள் ....


நன்றி - ஓம் சக்தி - ஏப்ரல், 1997

நிமிர்ந்தால் வானம் ....


நன்றி முகம்

முகவரி அற்ற மனிதர்கள் .....


நன்றி தினமலர் வாரமலர் - அக்டோபர், 27 , 1991

(எனது முதல் படைப்பு ..)

மகத்துவம் ....


நன்றி தினமலர் வாரமலர் - மே, 1 , 1994

கவலைகள் ....


நன்றி எஜமான் - 23-12-1996

என் பத்து மாத ரத்தினமே .....


நன்றி தினமலர் வாரமலர் - ஜனவரி 17, 1993

என் நடை பாதையில் .....


நன்றி புரட்சிவேந்தன்

ஆன்மிகம் எங்கே ...?


நன்றி புரட்சிவேந்தன்

Posted on: Tuesday, May 19, 2009

என்னைப் பற்றி தினமலர் வாரமலரில் ....



 
Tweet