Pages

Posted on: Thursday, July 23, 2009

நாலு விராட்டியும், ஒரு தீ பெட்டியும்........!






நாலு விராட்டியும், ஒரு தீ பெட்டியும்........!


இரண்டாவது
தாலியாய்
நிறுவன அடையாள அட்டை....!

தவணை முறை
வசதிகளை உதறிவிடவும்
மனமில்லை ...!


வாழ்க்கை
எப்பொழுதும்
முன் பதிவுசெய்த
இருக்கையாய்
அமைந்துவிடுவதில்லை ....

சில சமயம்
காத்திருப்போர் பட்டியலில் ....!

பல சமயம்
முன் பதிவில்லாத இருக்கையில்...

அடுத்த நிறுத்தத்தில்
அமர்ந்திருப்பவர் எழுந்ததும்
அந்த இருக்கை நமக்குத்தான்
என்ற நம்பிக்கையில் ...!

பயண முடிவில்
இருக்கை
வேறு ஒருவருக்கு... !

முதல் வகுப்பில்
பயணித்தாலும்...
முன் பதிவில்லா இருக்கையில்
பயணித்தாலும்...

தேவைப்படுவது
நாலு விராட்டியும்,
ஒரு தீ பெட்டியும் தான்....!

அதுகூட
இன்று சுருங்கி
ஒரு பொத்தானாய் போனது ...!

அடுத்த நொடி
நிச்சயமில்லாதபோது
இந்த நொடியில்
வாழத்தெரியாமல்
அடுத்தவருடன் தன் வாழ்வை
ஒப்புமை படுத்தி
சுயம் தொலைத்து
வேஷம் கட்டவே காலம்
போதவில்லை .... !

நன்றி தினகதிர் வாரகதிர் - செப்டம்பர்,13,2009

Posted on: Friday, July 3, 2009

தொலைந்து போனவன் ...!












ஏக்கம்...!


பின்புற தோட்டத்து
மாமர ஒற்றை கிளையில்
குயில் கச்சேரி.....
தத்தி, தாவி
நடனமிடும் அணில்,
இரசித்திட ஆசை...
ஞாயிறு வருமென
சமாதனம் சொன்னது
இயந்திர வாழ்க்கை....!

*************************
தொலைந்து போனவன் ...!


பரணில்
பள்ளி பருவத்தில்
வாங்கிய கோப்பைகளுக்கு
மத்தியில்,
கோப்பைகளாய்
தூசி படிந்து கிடக்கிறது ....
வாழ்க்கை பயணத்தில்
தொலைத்திட்ட இலட்சியங்கள் ....!

*********************

முரண்....!


மோட்டு கூரை
பிய்ந்து வீட்டிற்குள்
பட்டு தெறிக்கும்
மழைத் தூளி கண்டு
துள்ளி குதித்து
குதுகளித்தது
மழலை மனம்....!
வறுமை என
பிதற்றிக்கிடந்தது ....
இயந்திர வாழ்வில்
சுயம் தொலைத்த மனம்...!

Posted on: Thursday, July 2, 2009

விண்ணப்பம் ...! (காதலிக்காத பெண்களுக்கு மட்டும்..)






விண்ணப்பம் ...!





என் அறையெங்கும்
பொக்கிசமாய் உன் தடயங்கள் ...

உன் தாவணி
கிழித்த வேலிகாத்தான்
முள் முதல்,
உன் பாதம் வருடிய
கருங்கல் வரை ....

என்னை உன்
பொக்கிசமாய்
பரணிலாவது
தூக்கிபோடேன் .....

********************

ஜோடி பொருத்தம் ...!


கோவில் வாசலில்
உன் காலணி அருகே
என் காலணியை
கழற்றிவிட்டு,
பிரிய மனமின்றி
நின்று இரசிக்கிறேன் .....
ஜோடி பொருத்தத்தை ...!
**********************

உன் வாசம்...!


என் சட்டை பைக்குள்
உன் வாசம் ...!
நேற்று நீ
சூடி வீசி எறிந்த
ரோஜாவுடன் உன்
தலை முடிகள்...!

*************************

காதல் ....!


விழி மீன்
தூண்டியலிட
இதய புழு
வழியப்போய்
சிக்கிக் கொள்கிறது ...!

அறிவிப்பு....! (பெட்ரோல் விலை உயர்வு ஏழைகளை பாதிக்காது..! ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் ....)









அறிவிப்பு....!


பெட்ரோல் விலை உயர்வு
அறிவித்தார் அமைச்சர்.....
இது ஏழைகளின் பட்ஜெட்
ஏனென்றால்,
ஏழைகள்
நடந்தல்லவா செல்கின்றனர் ....!

********************************************************

அறிவிப்பு....!


குடிசைகள்
இல்லா
பாரதத்தை உருவாக்குவோம்
அறிவித்தார் அமைச்சர்.....
அவர் கண்பட்ட
குடிசைகள்
பங்களாக்களாக மாறின ...
மக்கள் மட்டும்
நடை பாதையில் .....

-----
 
Tweet