Pages

Posted on: Thursday, September 10, 2009

தன்மானம் தவிர்....!


தன்மானம் தவிர்....!





முதல் தேதிக்கு
முன்புவரும் ஞாயிறு....

நாயர் கடையில்,
கருவேப்பிலையோடு,
பச்சை மிளகாய்
மசால்வடை வாசனை
கேலி செய்கிறது ....

டீ -
"மூன்று ரூபாய் ஐம்பது பைசாக்கள்"
-பல் இளித்து
நக்கலடிக்கும் ஸ்லேட்டு வாசகம்..!

நண்பர்களைப்போல்,
உயிரில்லா
ஏ.டி.எம் இயந்திரமும்
மதித்து பத்து ரூபாய்
ஓ.டி தர மறுக்கிறது...

"நாயர், பழைய பாக்கியை
கேட்பாரோ?"
பயம் பத்தடிக்கு முன்பே
தடைபோட்டு நிறுத்திவைத்திருக்கிறது ...

அறிமுகமான யாராவது
டீ குடிக்க வரமாட்டார்களா ...?
காத்திருந்தேன் ...!

ஒரு ஜான் வயிற்றின்முன்
எண் ஜானும்
தோற்றுபோயின....!

முதல் தேதி வராமலா
போய்விடும்...?
முதல் தேதிக்கு
முன்பு வரும்
ஞாயிறை சபித்தபடியே ...

"நாயர்..!
நம்ப கணக்கு எவ்வளவு
ஆச்சு பாரு .. ."
சவடால் குரல் கொடுத்தபடியே
ஒரு மசால்வடையை எடுத்து
முனை கடித்தேன்...

தன்மானம்
முதல் தேதிவரை
தள்ளியே
நிற்கிறேன் என்றது ...!

Posted on: Thursday, September 3, 2009

துணைக்கு உன் நினைவுகள் ...




ஏக்கம்...!







நீ நின்றயிடம்....
நீ ஐஸ்கிரீம் சாப்பிட்ட பார்லர்...
நீ சாப்பிட்டபின் இதழொத்தி
எறிந்த காகிதம் விழுந்த குப்பைத்தொட்டி ...
ஒவ்வொரு இடத்தையும்
மனதால் மணந்து,
பார்வையால் வருடி...
அந்த சுகத்தில்
வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்....!

நீ உன் புதுக்கணவனிடம்
சுட்டிக்காட்டினாய் ,
"அந்த இடத்தில்லிருந்து தான்
ஒரு பைத்தியக்காரன் தினம்
என்னை பார்த்து
சிரித்தான்" என்று ....

தவறு ஒன்றும்
இல்லை, சகியே...!
நான் அங்கு
இருக்கிறேனா என்று
"ஒரு கணம்
"
பார்த்துவிட்டு
பேசியிருக்கலாம்.....!


இருட்டு ...!


வெறுமையான இரவுகள்....
துணைக்கு உன் நினைவுகள் ...
அழகாய் தெரிந்தாள் ....
இருட்டு!

Posted on: Tuesday, September 1, 2009

உன்னை நேசிக்க வைத்து ...!





காதலோடு...!






புதுகவிதையாய் நீ ...
மரபு கவிதையாய் நான்...
நமக்குள் தொடர்ந்து
கொண்டுத்தான்
இருக்கிறது...
முடிவுறா
விமர்சனங்கள்
காதலோடு...!




உன்னை நேசிக்க வைத்து ...!



உன் பார்வை
என்னை
தீண்டும்போதெல்லாம்
அகலிகையாய்
ஆகிடும் நான் ...

என்னை நீ
தவிர்த்திட முயலும்
கணங்களில்
முருங்கையாய்
முறிக்கப்படுகிறேன் ...

மறுபடியும்,
மறுபடியும்
துளிர்த்தெழுந்து
உன்னை நேசிக்க...!





மனசு ..!






உன் இரட்டை
ஜடையில்
ஒற்றை ரோஜா...
ஆடுகிறது மனசு..!

அறியாமை ...!





அறியாமை ...!



புத்தகத்திற்குள்
மயிலிறகை
வைத்துக்கொண்டு
குட்டி போடும்
என காத்துகிடந்த
அறியாமை
இன்றும்
தொடர்ந்துக்கொண்டுத்தான்
இருக்கிறது ...
கோப்புகளுக்குள்
பட்டங்களை
வைத்துக்கொண்டு ...!




உழைப்(பு) பூ



அழகு
உருவத்திலில்லை
பார்வையில்...!

சுவை
உணவிலில்லை
பசியில்...!

துன்பம்
மனதிலில்லை
பார்வையில்..!

வெற்றி
அதிருஷ்டத்திலில்லை
உழைப்பில் ..!
 
Tweet