Pages

Posted on: Wednesday, May 5, 2010

தினகதிர் வாரகதிர் இதழில் எனது பிரியமான சுவாச கனவு

நன்றி தினகதிர் வாரகதிர் 28/02/2010




பிரியமான சுவாச கனவிற்கு....!





உன் ஒவ்வொரு
அசைவும்
பசலையாய்
என் ஒவ்வொரு அணுவையும்
தின்று கொண்டிருக்கிறது ...

கல்லூரி கடைசி நாள்...
சிறு பிள்ளைக்கு
பஞ்சு மிட்டாய்
கொடுத்து ஏமாற்றுவதுபோல்,
நீ விட்டு சென்ற
உன் பார்வை ...

இன்றும் என்
கருவிழிகளுக்கு பின்னே
கர்ப்பத்தோடு...!

நீ நின்றயிடம்....
நீ ஐஸ்கிரீம் சாப்பிட்ட பார்லர்...
நீ சாப்பிட்டபின் இதழொத்தி
எறிந்த காகிதம்
விழுந்த குப்பைத்தொட்டி ...
ஒவ்வொரு இடத்தையும்
மனதால் மணந்து,
பார்வையால் வருடி...
அந்த சுகத்தில்
வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்....!

பொய்யாக இருந்தாலும்
உன்னுடன் வாழும்
அந்த நிமிடங்கள் ...

வேதனையாக இருந்தாலும்
இன்பமாக உணர்கிறேன்...

நீ காதலித்தாயா...?
நான் சுவாசித்தேன்...!

எனக்காகவே நீ
வாழ்வதாய்
இன்றும் நம்பிகொண்டிருக்கும்
என்னை
காலம் ஒரு நாள்
ஏளனம் செய்யலாம் ...

எங்கேனும்,
எப்பொழுதாவது
என் முன்னே தோன்றி
என் சுவாச கனவுகளை
கலைத்து விடாதே ...

சுகமான உன் நினைவுகளுடன்
கடைசி வரை
உறங்கிட வரம் தா ,
தேவதையே ....!

தினகதிர் வாரகதிரில் சீதைகள் தயார்...!

நன்றி தினகதிர் வாரகதிர் 14/03/2010


 


சீதைகள் தயார்...!



கத்து வட்டிக்காரனிடம்
கடன் பட்டவனைப்போல்
நிலை தடுமாறி
துடிக்கிறது இதயம்
நீ நடந்து சென்ற பாதையில்....

உன் பார்வை
தீண்டும் கணங்களில்
மின்சார தகன மேடையில்
வைக்க பட்டவனைப்போல்
செயலற்று கிடக்கிறேன்...

உன் சங்கு கழுத்தை
திருப்பி
புன்னகை பூவை
மலர விட்டு போகும்
உன் வாசம்
என்னை கட்டி இழுத்து
போகும்
உன் பின்னே ...

இதெல்லாம்
நீ விடலையாய் இரவல் வாங்கி
மயக்க நினைத்த
கவிதை வரிகள் தான்...

இதெல்லாம் வேண்டாம்
இராவணனே...!
வரதட்சணை கம்பிகளை
உடைத்து இந்த
முதிர் கன்னியை
காலமெல்லாம் காதலில்
மூழ்கடிப்பேன்
என்று ஒத்தை வரி
சொல் போதும்...

உன்னுடன் வனவாசம்
என்றாலும் உவப்புடன்
ஓடி வர இங்கே
சீதைகள் தயார்...!
 
Tweet