Pages

Posted on: Tuesday, October 11, 2011

பயணத்திற்கு உதவாத மாய கப்பல் ……….!




பயணத்திற்கு உதவாத மாய கப்பல் ……….!

 


கனவுப் போலத்தான் 
வாழ்க்கை ……!

கனவு விடிந்தால் 
கரைந்து போகும் ….
வாழ்க்கை கனவு 
கலைந்து எழுந்தால்
உடன் நடித்த ஒரு
கதாபாத்திரம் காணாமல்
பேயிருக்கும் ………!

பணம், பதவி, மரியாதையெல்லாம்
நாம் உண்ணும் உணவைப்போல்,
ருசிக்க , ருசிக்க பசிக்கும்
ஆனால்,
நிரந்தரமின்றி வீணாய்ப்போகும் ……..!

ஆயிரம் பேர் சூழ்ந்திருக்க
நான் யார் தெரியுமா?
என்று கேட்கும் ஆணவம்
அதே கேள்வியை
தனிமையில் தன்னை நோக்கி
கேட்க  ’நான்’ 
காணாமல் போயிருக்கும் …..!

காலுக்கு கீழ் அடிமையைப்போல்
கிடக்கும் பூமி,
-நிரந்தரமானது ……!

நானே எஜமான் என
மார்தட்டி திரிந்தவன்
மக்கி, மண்ணாய் அதே
பூமியோடு ஜக்கியமாவது
வாழ்வியல் சூத்திரம் …..!

உன்னை
எரிக்கலாம்,
அல்லது,
புதைக்கலாம் ……….

இதுவரை நீ சேர்த்து வைத்த
சொத்துக்கள் ……
சொந்தங்கள் ….
பதவிகள் …..
அதிகாரங்கள் ….
தம்பட்டங்கள் ….
அடுத்தவர்களின் வயிற்றெரிச்சல் …
ஆசிர்வாதங்கள் ….
ஏதேனும் துணைவருமா …. ?

தீ சுடும் …!
வாழ்ந்தோர் சொல்கேட்டும்
தெளியலாம் …
தொட்டுப்பார்த்தும் பாடம் கற்கலாம் ….!

ஆறடி நிலம் கூட
உறுதியில்லாத வாழ்வில்,
கொண்டு போவதற்கு 
என்ன இருக்கிறது ….?

வாழ்ந்த நாளில்
உனக்கு பயந்து எத்தனை பேர்
உன்னுடன் வந்தார்கள்
என்பது பெரிதில்லை …..

உன் கடைசி யாத்திரையில்
கண்ணீருடன் வருகிறவர்களின்
எண்ணிக்கை 
நீ வாழ்ந்த
வாழ்க்கையை சொல்லிவிடும் ….!

மனிதனாய் பிறப்பது எளிது ….
மிருகமாய் வாழ்வது எளிது …..
தெரு நாயைப்போல் 
செத்துப்போவது எளிது …..

நீ
மனிதனா ….?
மிருகமா ….?

உன் கடைசி யாத்திரையில்
கண்ணீருடன் வருகிறவர்களின்
எண்ணிக்கை நீ வாழ்ந்த
வாழ்க்கையை சொல்லிவிடும் ….

Posted on: Thursday, September 29, 2011

எனக்கே, எனக்காக .. கண்ணீரோடு காதல் சொல்லிப்போ ...

நன்றி பதிவர் தென்றல் செப்டம்பர் 2012



இடமாற்றுப்   பிழை  நீ எனக்கு ....


 
 
 
 
 
 
கடவுள் அப்படி ஒன்றும்
நல்லவனில்லை ....

பிறர் துன்புறுவதை கண்டு
இன்புறும் கொடிய
மனம் படைத்தவன் ....

இல்லாதிருந்தால்,

உயிரின் பகுதியே ...!
உன்னை படைத்தவன்
என்னையும் படைத்திருப்பனா ...?

பொய்கள் எல்லாம் மெய்களாய் ,
மெய்கள் பொய்களாய்
மாறிப்போன இடமாற்றுப் பிழை
நீ ....

இரவில் வரும் நிலவில்
ஆரம்பித்து
மாலை வரும் தென்றல் வரை
உன் நினைவுகளை என்னுள்
பதியமிட தவறுவதில்லை ...

விடியற் நேரம்
துளிர்க்கும் புல் நுனி
பனித்துளி கண்டு
என் பசலையில் துளிர்த்த
உன் கண்ணீர்த் துளியோ  என
என் மனம் உடைந்து அழுகிறது ...

பொய்யில் மெய் கண்டு
பொய் என தெரிந்தும்
பொய்யாய் வாழும் சுகம் தேடி
உன் நினைவு போதையில்
திரிவதும்
ஒரு வகை தவம் தான் ...!

தவத்திற்கு தவமேற்றி
இந்த உடல் உயிரை
அடைந்து முழுமை பெற
என் உயிரின் ஆதாரமே ...!

நீ வா ...

அல்லது,

எனக்காக ...
எனக்கே, எனக்காக …
ஒரே ஒரு துளி
கண்ணீரோடு காதல்
சொல்லிப்போ ...

கவிஞனாய்
வாழ்ந்துவிட்டுப் போகிறேன் ...!

Posted on: Wednesday, September 28, 2011

தாம்பத்தியம் போல் சுயம் கொண்டது முதுமை ...!








 வாழ்க்கையும் வாழ்பவர்களும் .....


 
 
 
 
 
முதுமை வாழ்வின்

மொழி...!

வாழ்பவர்களுக்கு
வாழ்ந்தவர்களின் வழிகாட்டி...!

வாழ்க்கை சுழற்சியின்
இரண்டாவது குழந்தை பருவம்
முதுமை...!

தான் பெற்ற குழந்தையிடமே
தான் குழந்தையாகி போகும்
பரிணாமம் ...!

தாம்பத்தியம் போல்
சுயம் கொண்டது முதுமை ...!

அனிச்ச மலராய்
மனமிருந்தாலும்

வாடுவதை யாரும்
பொருட்படுத்துவதில்லை ....!

சுருங்கிய முகத்தை விட
சுனோ பூசிய முகம்
ஈர்ப்பானதால்,

இரும்பு இதயத்தை  பெற்றவர்கள்
இரும்பு கட்டிலில்
முதியோர் இல்லத்தில் ....!

கிரிச்சில் மகன் ...

முதியோர் இல்லத்தில் பெற்றோர் ...

வெந்ததை அவசரகதியில்
அள்ளிப்போட்டு,
எட்டு மணி பஸ்ஸை பிடித்து,
சம்பாதித்து  என்ன
 செய்ய  போகிறோம் ...?

நாளை
எதோ ஒரு முதியோர் இல்லத்தில்
எதோ ஒரு இரும்பு கட்டிலில்
படுத்துக் கிடக்கவா...?

மனிதா ...!
வாழ்க்கை அழகிய கவிதை ....

கூச்சலிடும் குழந்தைகள் ...
கூடத்தில் "டொங் டொங்.."  என
வெற்றிலை தட்டியபடியே
அளவாடும் பெற்றோர் ...
தோட்டத்தில்,
துள்ளி குதித்து திரியும் அணில் ...

நினைத்திடவே ஆனந்தம்
பெருகுகிறது ...

வாழ்க்கையை வாழ்ந்து
பார்க்க வேண்டும் ...

நாட்களை  நகர்த்திப் போவது
பாவம் ...!

வாழ்கையை வாழாமல்
வெந்ததை தின்று
பணத்தின் பின் திரிதல்
பிணத்திற்கு சமம் ...!

நாளைய நமது
முதுமை சுகமாய் இருந்திட ,

நமது குழந்தைகளுக்கு
நாம் தான் கூட்டுக் குடும்ப
வாழ்க்கையை சுவைக்க
கொடுக்க வேண்டும் ...!

வாழ்க்கை அழகான கவிதை ...!

கூச்சலிடும் குழந்தைகள் ..
கூடத்தில் அனுபவ முதிய பெற்றோர் ...
மிகவும் ஆதரவாய், பாதுகாப்பாய்
உணரும் நம் மனம் ...!

வாழ்க்கை சுழற்சியின்
அழகிய பருவம்
முதுமை ..!

Posted on: Tuesday, July 19, 2011

தினமலர் வாரமலரில் இடுகாட்டில் காத்திருப்பேன் ....!

நன்றி தினமலர் வாரமலர் 17/07/2011





இடுகாட்டில் காத்திருப்பேன் ....!







என்னைக் கொண்டே
என் மூளை
செல்களுக்குள்
உன் பெயரை
பச்சை குத்திக் கொண்டவளே...

உன்னுள் கரைந்து
உன் காதலில் நான்
தாய்மை அடைந்தேன்!

என் மனம்
உன்னால் குப்பையாய் போனதால்,
நீ தீண்டி குப்பையில்
போட்டவைகள் எல்லாம்
பொக்கிஷமாய் என் அறையில்!

சிவந்து சிரிக்கும்
முற்றத்து ரோஜா...

தாவி ஓடும்
கொல்லைப்புற அணில் குட்டி...

ஒவ்வொரு நிகழ்வும்
நொடிக்கொரு தரம்
உன் நினைவுகளை
என்னுள் புதுப்பித்துக் கொண்டே
இருக்கிறது!

எல்லா பெண்களையும்
போல் தானே நான்,
என்னிடம் புதுமையாய்
எதை கண்டாய்
என ஏளனமாய் கேட்டாய்!

பிரியமே...
என்னை உன்னில்
மட்டும் தானே காண முடிகிறது!

வாழும் போது ஒருவராய்
வாழும் நாம்...
மரிக்கும் போது மட்டும்
நான் சிறிது
முந்திக் கொள்ள ஆசைப்படுகிறேன்!

உனக்கு முன்
நான் மரித்து,
மக்கி, மண்ணாகி
உன்னை மலர் போல்
தாங்க,
இடுகாட்டில் காத்திருப்பேன்!

Posted on: Tuesday, July 5, 2011

பாக்யா வார இதழில் சாயம் போட்ட மனிதர்கள்

நன்றி பாக்யா 8-14/07/2011
 
 

Posted on: Tuesday, June 28, 2011

கல்கி வார இதழில் நிறைவேறிய எனது ஏக்கம்...

நன்றி கல்கி வார  இதழ் 03/07/2011


                                       ஏக்கம்


           
மாமர ஒற்றைக் கிளையில்


குயில் கச்சேரி...

தாவித் தாவி நடனமிடும்

அணில்...

மார்கழி காலை

குளிரில் போர்வைக்குள்

பூனைக்குட்டியாய்

கடைசி ஐந்து நிமிடத்

தூக்கம்...

ரசித்திட ஆசை...

ஞாயிறு வருமென

சமாதானம் சொன்னது

இயந்திர வாழ்க்கை!

Posted on: Monday, May 23, 2011

கல்யாண சந்தையில் பாக்யா வார இதழ்


நன்றி பாக்யா  -  மே 27-  ஜூன் 2 , 2011




Posted on: Thursday, April 14, 2011

பாக்யா வார இதழின் பார்வையாளர்கள் நேரம்

நன்றி பாக்யா 15-21/04/2011




Posted on: Monday, April 11, 2011

தினமலர் வாரமலர் வீரிய வித்தா ...?

நன்றி தினமலர் வாரமலர் 10/04/2011





வீரிய மிகு வித்து....!




ஒரு மணிநேரத்திற்கு
விலை பேசினால்
-விலைமகள் ..!

ஆயுளுக்கும் விலை பேசினால்
-கணவன்..!

பத்து நிமிடம் உடலை
சுமப்பவளுக்கு கொடுக்கும்
அங்கீகாரத்தை கூட,
பத்து மாதம்
தன் விந்தை
சுமப்பவளுக்கு கொடுப்பதில்லை
இந்த அசிங்கம் பிடித்த சமூகம்...!

பதினாறில்
பெற்றவர்களின் சொல்லில்
சிறையாகி ...

இருபதில்
மூன்றுமுடிச்சில் சுயம் தொலைத்து...

ஆறுபதில்
தன் தொப்புள்கொடியே
பாரமாய் நினைக்கையில் ....

மரமாய் ...

மரம்
பூப்பதுண்டு ....
சூடிக்கொண்டதில்லை....

மரம்
காய்ப்பதுண்டு ...
புசிப்பதில்லை....!

அதனால்,
சில மரங்கள்
முதியோர் இல்லங்களில்...

வீட்டிற்கு ஒரு மரம்
வளருங்கள்...
ஆனால்,
பெண்களை மட்டும்
மரமாய் வேண்டாம்....

அடுத்த தலைமுறையின்
வீரிய மிகு வித்து
அவள் ....!

Posted on: Friday, January 28, 2011

நாளை என்பது ...!



நாளை என்பது ...!





நாளை என்பது
உடலை உயிரோடு
ஒட்டிவைக்கும் நம்பிக்கை...!

இன்றைய பசியை
நாளை கிடைக்கப்போகும்
உணவு பசியாற்றாது....
ஆனால்,
நம்பிக்கையூட்டும் ....!

நாளை
விருட்சமாவோம் என்ற
நம்பிக்கையில் தான்
பிரமாண்ட மரம் கூட
சிறு விதையுள்
தன்னை சுருக்கி
தவம் கிடக்கிறது  ...!

நாளைய நம்பிக்கைத்தான்
இன்றைய அவமான
வலிகளுக்கெல்லாம் மருந்து ...!

நம்பிக்கை இழந்தவன்
தன்னை இழந்தவன் ...!

நேற்றைய விதைப்பே
இன்றைய உணவு ...!

அறுவடைகள்
காலதாமதமாகலாம்
ஆனால்,
பொய்ப்பதில்லை ...!

மரத்திற்கு பழம்
சுமையாகலாம்
ஆனால்,
நீ உனக்கு சுமையாக கூடாது ...!

அடுத்த நொடியும்
உயிர் வாழ்வோம்  என்ற
நம்பிக்கைத்தான்
வெளிவிட்ட காற்றை
மீண்டும் நுரை ஈரல்
நிறைக்கிறது....!

நம்முன் தட்டில் கிடக்கும்
ஒவ்வொரு பருக்கையும்
அடுத்த நொடி நாம்
உயுரோடு இருந்து
உண்ண போகிறோம்
என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு ...!

வா ... நாளையை
ஒரு கை பார்ப்போம் ...!

உள்ளர்ப்பனத்தோடு  உழை ...!

நாளை, உன் வீட்டு
வேலைக்காரனாகும் ...!

நாளை என்பது
உடலை உயிரோடு
ஒட்டிவைக்கும்
நம்பிக்கை பசை ...!

Posted on: Thursday, January 27, 2011

தினமலர் வாரமலரில் நான் வாழ்ந்த வாழ்கை

நன்றி தினமலர் வாரமலர் 23/01/2011




வா வாழ்ந்து பார்க்கலாம் …!





வாழ்கை அழகான கவிதை …
வாசிக்கவும் ​செய்யலாம்..
கசக்கி தூர
வீசவும் ​செய்யலாம் …!

உயிர் சுழற்சி
காமம் சம்மந்தப்பட்டது…..!

காமம் மனம் சம்மந்தப்பட்டது…..!

அடுத்தவனின் மரணம்
தரும் பயம்
வாழ்கையை ​சொல்லித்தரும் …!

பயந்த மனம் பயத்தில்
இறந்த கால நினைவுகளில்
ஆறுதல் தேடும் ..!

எதிர்கால கனவில்
ஒளிந்துக்​கொள்ள பார்க்கும் …!

நிகழ்காலம் மட்டும்
எட்டிக் காயாய் ….

தன்னை பதிவு செய்துக்​கொள்ளும்
போராட்டத்தில்
பல முகங்கள் சூடி
தான் ​தொலைந்து போன
பரிதாபம் …

வீணான மிச்சங்கள்
கூட சில உயிர்களுக்கு
உணவாகும் ……
வீணாய் முடங்கிக்கிடப்பவன்
தனக்கே சுமையாவான் ….!

முட்டி, முட்டி ஓட்டை
உடைத்துத்தான்
கோழி குஞ்சு கூட
வெளிக்காற்றை சுவாசிக்கிறது…..

உன் வாழ்கை
உன் முன்னே…

வாழ்கை அழகான கவிதை …
வாசிக்கவும் ​செய்யலாம்..
கசக்கி தூர
வீசவும் ​செய்யலாம் …!

கடைசி நாளில்
சிலரின் சில கண்ணீர் துளிகள்
தான்
வாழ்ந்த நாளில்
நாம் சேர்த்து ​வைத்த சொத்து ……!

வா மனிதனாய்
வாழ்ந்து பார்க்கலாம் …!
 
Tweet